×

கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் மோசமான உணவு விநியோகம் பட்டியலில் 3ம் இடம் பிடித்தது

நாகர்கோவில், ஜூலை 23: ரயில்களில் மோசமான உணவுகள் விநியோகம் செய்யப்படுகின்ற பட்டியலில் கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் இடம் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படுகின்ற பிரதான ரயில்களில் ஒன்று கன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில். தினசரி இயக்கப்படுகின்ற இந்த ரயிலை சுற்றுலா பயணிகள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.இந்த ரயிலில் உணவு விநியோகம் செய்யப்படுகின்ற கேட்டரிங் நிறுவனத்தால் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை என்று பயணிகள் அவ்வப்போது புகார் கூறி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை கிடைத்த புகார்கள் அடிப்படையில இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கார்பரேஷன் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளது.அந்த வகையில் மோசமான உணவு விநியோகம் செய்யும் ரயில்கள் பட்டியலில் திருவனந்தபுரம் - நியூடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் முதலிடத்திலும், எர்ணாகுளம் - நிஜாமுதீன் மங்களா எக்ஸ்பிரஸ் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் கன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் இடம்பெற்றுள்ளது.கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியார் நிறுவனம் ஒன்று கேட்டரிங் பணியை செய்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட தூர ரயில்களில் கேட்டரிங் முழுவதும் டெல்லியில் உள்ள சில கம்பெனிகள் எடுத்து செய்கின்றன. ரயிலில் உணவு மோசமாக உள்ளது என்று தெரிவித்தால் பயணிகளை மிரட்டுவது, மிகுந்த கெடுபிடி செய்கின்றவர்களிடம் வருத்தம் தெரிவிப்பது என்று கேட்டரிங் ஊழியர்களின் செயல்பாடுகள் இருப்பதாகவும் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...