×

மார்த்தாண்டத்தில் வாக்கு சீட்டு எரிப்பு விவகாரம் கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகளிடம் விசாரணை தலைமறைவானவர்களை பிடிக்க 2 தனிப்படை

மார்த்தாண்டம், ஜூலை 23 : மார்த்தாண்டத்தில் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில், வாக்கு சீட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவானவர்களை தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்ட தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க அலுவலகம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி ஒய்.எம்.சி.ஏ. அருகே உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் நடந்தது. வேட்பு மனு பரிசீலனையின் போது, ஒரு அணியை சேர்ந்தவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்றும், மறு உத்தரவு வரும் வரை வாக்கு பெட்டியை சீல் வைத்து, தனி அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி வாக்குபெட்டி, சீல் வைக்கப்பட்டு தனி அறையில் வைத்தனர். அந்த அறையும் சீல் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. தற்போது வழக்கு விசாரணையில், வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம் என்ற உத்தரவு வந்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் 4 பேர் கும்பல் அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலக வாயில் அறையில் இருந்த காவலாளி கனகராஜை சரமாரியாக தாக்கி மரத்தில் கட்டி வைத்தனர். அதன் பின்னர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வாக்கு பெட்டி வைக்கப்பட்டு உள்ள அறை கதவை உடைத்து, வாக்கு பெட்டியை வெளியே தூக்கி வந்து உடைத்தனர். அதில் இருந்த வாக்கு சீட்டுகளை கிழித்து தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி சென்றனர்.இது குறித்து  மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீ வைத்த கும்பலை பிடிக்க தக்கலை டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்த சங்க முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்கு சீட்டுகள் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், சிலரை பிடித்து விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே போலீசின் சந்தேக பட்டியலில் உள்ள சிலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களையும் தேடி வருகிறார்கள். அவர்களின் செல்போன் எண் மூலம் அவர்கள் யார், யாரை தொடர்பு கொண்டு பேசினர் என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்க இருந்த நிலையில் தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளதால் தோல்வி பயத்தின் காரணமாகவே இதை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி