பருவமழை தாமதத்தால் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நாற்றாங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கப்படுமா?

தேனி, ஜூலை 23: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 54 நாட்களாக தாமதமானதால் 20 ஆயிரம்  ஏக்கர் வயல்களில் முதல் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் வளர்க்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் உட்பட விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 54 நாட்கள் தாமதமானதால் 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் முதல் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்ட கணக்குப்படி 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் ஓரிரு நாளில் அணை நீர்மட்டம் மளமளவென  உயர்ந்து விடும். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளுக்கு கூடுதலாக 150 கனஅடி நீர் திறந்து விட வேண்டும். இப்போது நாற்றங்கால் உருவாக்கினால் கூட மழை கிடைத்து விட்டால், இருபோக சாகுபடி எடுத்து விட முடியும். மழை தொடர்வதால், அணை நீர்மட்டம் உயரும் என்றே வானிலை மைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே, தமிழக அரசு தமாதம் ஏதுமின்றி தண்ணீர் திறக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, `முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்கு விநாடிக்கு 150 கனஅடி நீரும், நாற்றங்கால் தயாரிப்பு பணிகளுக்கு 150 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாமதமின்றி நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை தொடங்கலாம். கூடலூர், கம்பம், உத்தமபாளையம் வரை உள்ள விவசாயிகள் இருபோக சாகுபடி எடுக்க வாய்ப்புள்ளது. சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர் வீரபாண்டி, முத்துதேவன்பட்டி, தேனி, உப்புக்கோட்டை, குச்சனூர் பகுதி விவசாயிகள் ஒரு போகம் மட்டுமே சாகுபடி எடுக்க முடியும்’ என தெரிவித்தனர்.

Related Stories: