மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் வழிகாட்டி பலகைகளை மறைத்து ஒட்டப்படும் ‘வால் போஸ்டர்கள்’

மானாமதுரை, ஜூலை 23: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, நான்கு மாவட்டங்களை இணைக்கும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து 9வது கிலோ மீட்டரில் கரிசல்குளம் கிராமத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்குகிறது. மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் சென்று வருகின்றனர். இது தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிப்பட்டினம், சேதுக்கரை, திருப்புல்லானி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பார்த்திபனூர் வழியாகவும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்கின்றனர்.  இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், காளையார்கோயில், பட்டமங்கலம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கும், செட்டிநாடு, கானாடுகாத்தான், கோட்டையூர் உள்ளிட்ட நகரத்தார் அரண்மனை வீடுகளுக்கும் சுற்றுலாவாக வருகின்றனர். ராமநாதரபும், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்கள் மானாமதுரை மெயின்ரோடு வழியாகத்தான் சிவகங்கை செல்ல வேண்டும்.இந்நிலையில், ஆனந்தபுரம் பைபாஸ் ரோடு, அண்ணா சிலை, தேவர் சிலை, காந்தி சிலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் மீது போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்களை கட்டியும் மறைத்து வருகின்றனர். இதனால், வழிகாட்டிப் பலகையில் உள்ள எழுத்துகள் அழிகின்றன. வாகன ஓட்டிகள் எந்தப் பக்கம் போவது என தெரியாமல் விழிக்கின்றனர். குறிப்பாக தாயமங்கலம் செல்லும் சாலையில் வழிகாட்டும் அறிவிப்பு பலகையின் மீது பிளக்ஸ் பேனர்கள் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளதால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் குழம்புகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் முறையான வழிகாட்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறுகையில், அண்ணா சிலை, தேவர் சிலை, வாரச்சந்தை ரோடு, தாயமங்கலம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள வழிகாட்டி பலகைகளில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் எழுத்துக்கள் அழிகின்றன. இளையான்குடி அருகே, பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலுக்கு தென்மாவட்ட மக்கள் ஆடி மாதத்தில் அதிகமாக வருகின்றனர். வெளியூர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வரும் வழிகாட்டி பலகையை மறைத்து தனியார் நிறுவனம் பேனர்களை கட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகிறார்கள். எனவே, வழிகாட்டி பலகைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED சிவகங்கை, காரைக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா