×

ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசாரை இடமாற்ற கோரிக்கை

மதுரை, ஜூலை, 23: மதுரை நகரில் 23 காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு, குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு போலீஸ் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒரு காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 வருடம் பணியாற்றினால் உள்ளூரில் இடமாற்றம் செய்வது வழக்கும். அதன்படி சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 3 வருடம் தொடர்ந்து பணியாற்றியவர்களை போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்து வருகிறார்.ஆனால் பல சிறப்பு பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றும் நபர்கள் பல்வேறு காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்தும், வேறு இடத்திற்கு செல்லாமல் அதே சிறப்பு பிரிவில் ‘ஓடி’யாக பணி தொடர்ந்து வருகின்றனர். ஒரு சிலர் மாறிய இடத்திற்கு சென்றும், பலர் இன்னும் மாறாமலேயே உள்ளனர். ஒரே இடத்தில் பல ஆண்டுகள் உயர் அதிகாரிகளை கவனித்துக் கொண்டு பணியாற்றி வருவதாக போலீசார் குற்றம்சாட்டுகின்றனர். இவர்களை கண்டறிந்து போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.பிற பிரிவு போலீசார் கூறும்போது, ‘‘மதுரை நகரில் போலீசார் தொடர்ந்து 3 வருடம் பணியாற்றினால் அந்த பகுதியில் நன்கு பழகி குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. இதனால் போலீசாரை உள்ளூரில் அடுத்தடுத்த காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் மத்திய குற்றப்பிரிவு, சிஆர்பி உள்ளிட்ட பல சிறப்பு பிரிவுகளில் பலர் தொடர்ந்து 10 வருடத்திற்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனி பிரிவுகளில் நீண்ட நாட்களாக தொடர்ந்து பணியாற்றும் நபர்களை கணக்கெடுத்து, இவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...