ஆக்கிரமிப்பை அகற்றும்போது வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்

திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் அருகேயுள்ள அய்யலுாரில் சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்காமல் இடம் ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள அய்யலுார் நடைபாதை கடை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பிச்சை முத்து தலைமையில்  வந்த  வியாபாரிகள் கலெக்டர்  விஜயலட்சுமியிடம் அளித்த மனுவில், அய்யலுாரில் பல ஆண்டுகளாக பாலத்திற்கு கீழும், மேலும், சுற்றுப்பகுதியிலும் 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இவர்கள் காய்கறி மற்றும் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ல் மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதை மாநில அரசு கடைபிடிக்க வேண்டும். மேலும் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் போது சாலையோர வியாபாரிகளுக்கு தகுந்த இடம் இல்லாமல் செய்கின்றனர். இதனால் அவர்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறிகி வருகிறது. இதற்கு உரிய இடத்தை வழங்க வேண்டும். இதனால் ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே வியாபாரிகளுக்கு மாற்று இடம் தந்து தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தனர்.இதேபோல் மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் சம்சுதீன் தலைமையில் வந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அய்யலுார் பேரூராட்சியில் குடிசைகளில் ஏராளமான பொதுமக்கள் வா்ழ்ந்து வருகிறார்கள். தற்போது பேரூராட்சி நிர்வாகம் 250 பயனாளிகளுக்கு வீடுகட்டி கொடுத்துள்ளது. மேலும் பலருக்கு அனுமதி அளிப்பதற்கும் கால தாமதம் ஏற்படுகிறது. இதில் புதிய பயனாளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சியில் புதிய வீடுகள் கட்டுவதற்கு மனு அளித்துள்ளனர். ஆனால் சில அதிகாரிகள், ஆளும்கட்சியினர் தலையீட்டால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வீடுகள் கட்டி தருவதற்கும், மற்றவர்களை புறக்கணிப்பதாகவும் தெரிகிறது. இது இல்லாமல் அனைத்து ஏழை மக்களும் குடிசையில் வசிக்காமல் கான்கிரீட் வீடுகளில் வசிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். பயனாளிகள் தேர்வில் முறைகேடுகள் இல்லாமல், நியாயமாக நடப்பதற்கும் ஆவன செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் பழநி மருத்துவநகரை சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு இடத்தை அரசு அகற்றுவது சம்பந்தமாக மனு அளித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தர கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

Related Stories: