×

பொதுமக்கள் வலியுறுத்தல் போதிய ஆவணங்கள் இல்லாமல்

ராமநாதபுரம், ஜூலை 23:  கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் மாரி மகன் மணிகண்டனை, 7 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை நேற்று முன்தினம்  மதுரையில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வழக்கில் கைதான அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் வயது சான்றிதழ்களை இளஞ்சிறார்  நீதிக்குழுமத்தின் உறுப்பினரின் சான்று  பெற்று  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில்  சிறுவர்களுக்கான சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் உள்ள இளஞ்சிறார்  நீதிக்குழுமத்தின் உறுப்பினர் தசரத பூபதி வீட்டிற்கு, கமுதி டிஎஸ்பி (பொ) முத்துராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, கஜேந்திரன் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட 7 சிறார்களை அழைத்து வந்துள்ளனர். ஆனால் வயதுக்கான சான்றிதழ்களை அளிக்கவில்லை.  வயதுக்கான ஆதாரம்  இல்லாத நிலையில் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என சான்று அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாத நிலையில்,  இரவு முழுவதும் அவரது இல்லத்திலேயே அனைவரையும் தங்க வைத்து போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் இரவோடு இரவாக சிறார்கள் படித்த மதுரை பள்ளிகளுக்கு  சென்று வயதுக்கான பள்ளி சான்றிதழை பெற்று வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து 18வயதிற்குட்பட்டவர்கள் என சான்றிதழை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறுவர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

முக்கியமான வழக்கில் சிறுவர்களை அழைத்து வரும் போலீசார் வயதுக்கு ஆதாரமான சான்றுகளை முறைப்படி எடுத்து வராமல் வந்துள்ளனர். நகரின் முக்கிய வீதியில் நள்ளிரவு முதல் 50க்கும் மேற்பட்ட போலீசார் காவல்துறை அதிகாரிகள் என வந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் ஏராளமான போலீசார் வாகனங்கள் நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் கீழக்கரையில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்திய நிலையில், ராமநாதபுரத்திலும் தீவிரவாதிகள் யாரும் பதுங்கி இருந்துள்ளார்களா என கலக்கத்தில் இருந்தனர். காலை நேரத்தில்  வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவில்லை. குழந்தைகள் ஒரு விதமான பயத்துடனே பள்ளி சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போலீசார் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தால் மக்கள் என்ன நடக்கிறது என புரியாத நிலையில் இருந்தனர். கொலை வழக்கில தொடர்புடைய 7 பேரை அழைத்து வந்துள்ளனர். போதிய பாதுகாப்பில்லாத நிலையில்  இந்த பகுதியில் சிறுவர்கள் தப்பி செல்ல வாய்ப்புள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள இங்கேயே வந்து தாக்கவும் வாய்ப்புள்ளது. காவல் துறையினரின் கவனமில்லாத செயல்களால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை