மனநிலை பாதிக்கப்பட்ட மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மனநிலை பாதிக்கப்பட்ட மகளை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் ஆதிகேசவன் (51). இவரது மனைவி மோகனா. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மோகனா தனது மனநிலை பாதிக்கப்பட்ட மகளை காப்பகம் ஒன்றில் சேர்த்து, அங்கேயே வேலை செய்து வந்தார்.
Advertising
Advertising

இந்நிலையில், மகளின் பராமரிப்புக்காக மாதம் ₹5 ஆயிரம் தர வேண்டும் என்று, குடும்பநல நீதிமன்றம் ஆதிகேசவனுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதனை அவர் தராமல் இருந்துள்ளார். இதனால் மோகனா, மகளை ஆதிகேசவன் வீட்டு வாசலில் விட்டு சென்றுள்ளார். ஆதிகேசவன் தனது மகளை பராமரிக்க உறவினர்கள் வீட்டில் விட்டுள்ளார். அவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மனநல காப்பகத்திலும் விட முயற்சி செய்துள்ளார். அங்கேயும் விட முடியவில்லை. கடந்த 20.9.2017 அன்று, தனக்கு மிகவும் தொல்லையாக இருக்கும் மகளை ஆதிகேசவன் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டிலேயே வைத்து, நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துள்ளார். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதிகேசவனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில், ஆதிகேசவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: