×

மஞ்சூர் அருகே கடைவீதியில் உலா வந்த காட்டுமாடு

மஞ்சூர், ஜூலை 23: மஞ்சூர் அருகே கடைவீதியில் உலா வந்த காட்டுமாட்டை கண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு, மைனலாமட்டம், கிட்டட்டிமட்டம், பெங்கால்மட்டம், சாம்ராஜ் எஸ்டேட் சுற்றுப்புற பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் நேரங்களிலேயே உலா வரும் காட்டுமாடுகள் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதால் தோட்டத் தொழிலாளர்கள் இலை பறிக்க செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது மட்டுமின்றி சாலைகளில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழி மறிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பெங்கால்மட்டம் பகுதியில் தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டகாட்டுமாடுகளில் ஒன்று தோட்டத்தில் இருந்து வெளியேறி பஜார் பகுதியில் நேற்று காலை  உலா வந்தது. இதனால் கடைவீதியில் நின்றிருந்த பொதுமக்கள் பீதியடைந்ததுடன் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து பொதுமக்கள் சிலர் சத்தம் போடவே  சாலையோரம் இருந்த தடுப்பு சுவரின் மீது தாவி குதித்து மறுபுறம் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் காட்டுமாடு சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி