×

நவ.1ம் தேதி தமிழ்நாடு தின கொண்டாட்டம்

ஈரோடு, ஜூலை 23: நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்ததை கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்த அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். பல ஆண்டுகளாக நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடி வரும்  நாங்கள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமே ஒவ்வொரு தமிழனும் ஜாதி, மத வித்தியாசமில்லாமல் அரசியல் வேறுபாடுகளை மறந்து தான் தமிழன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காக தான். அரசு கொண்டாட உள்ள தமிழ்நாடு தினத்திற்கு யார் ஆட்சியில் இருந்தாலும் அனைத்து கட்சியினரும் தமிழ் ஆர்வலர்களும் அழைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் வாகனங்களிலும், வீடுகளிலும் அவரவர் கட்சிக் கொடிக்கு பதிலாக பொதுவான ஒரு கொடியை கட்ட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டுக்கு என தனியாக ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே நவம்பர் 1ம் தேதியில் கர்நாடக தினத்தை கொண்டாடி வரும் கன்னடர்கள் கர்நாடகாவிற்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும்  தனிக் கொடியை கர்நாடகா முழுவதும் கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  தமிழக அரசு நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடினால் மட்டும் போதாது. தமிழன் என்ற உணர்வை மேம்படுத்த வேண்டும். தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் தொடர்ந்து காப்பாற்றுவதற்கு வழிவகுக்கும். இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்திற்கான வளர்ச்சி திட்டங்களும், தமிழக உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எல்லாம் மறந்து தமிழர் என்ற உணர்வோடு மொத்த தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நேரத்தில் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை