×

வாரம் இருமுறை கூலி வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 23:சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் 750க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான பாவு நூல் கூட்டுறவு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு பெட்ஷீட் உற்பத்தி செய்து வருகின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பெட்ஷீட்டிற்கான நெசவு கூலி ஆரம்ப காலத்தில் தினமும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், வாரம் இருமுறை அதாவது புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வாரம் ஒரு முறை சனிக்கிழமை மட்டுமே கூலி வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி முன்பு போலவே வாரம் இருமுறை வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதே போல், கூலி ரூ.1400க்கு மேல் இருந்தால் நெசவாளர்களின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால், வங்கியில் இருந்து பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுவதோடு கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் விடுமுறை எடுத்தாலோ அல்லது வேலை விஷயமாக தொடர்ந்து 2 நாட்களுக்கு வெளியே சென்றாலோ வங்கியில் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.எனவே, முன்பு போலவே உறுப்பினர்களிடம் நேரடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்கோப்டெக்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்தனர்.

Tags :
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை