39 ஆண்டில் ஒரு முறை கூட குண்டேரிப்பள்ளம் அணை தூர்வாரப்படவில்லை

ஈரோடு, ஜூலை 23: அணை கட்டப்பட்டு 39 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படாததால், குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் பிடிப்பு பாதியாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள குன்றி மலையடிவாரத்தில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 42 அடி உயரமுள்ள இந்த அணை, கட்டப்பட்டது முதல் இதுவரை தூர்வாரப்படவில்லை. மலையடிவாரத்தில் இந்த அணையில் மண் குவிந்து  தண்ணீர் கொள்ளவு பாதியாக குறைந்துள்ளது. இதனால், அணையில் தேக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. எனவே, அணையை தூர் வார வேண்டும் என கடந்த 15 ஆண்டாக இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவதுஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கு அடுத்து பெரிய அணையாக  குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை மழை காலங்களில் முழுமையாக நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேறினாலும், அணையில் இருக்கும் தண்ணீர் பாசனத்துக்கு 40 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. 15 ஆண்டுக்கு முன்பு வரை அணை நிரம்பினால் 70 நாட்கள் வரை பாசனத்துத்துக்கு தண்ணீர் விடப்படும். அணை கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டு முடிந்த நிலையில், இதுவரை முழுமையாக தூர்வாரப்படவில்லை. நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் 537 ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் குண்டேரிப்பள்ளம் அணை இடம்பெறவில்லை. இந்த அணையை தூர்வார வேண்டும் என கடந்த 15 ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அணையை முழுமையாக தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச்செல்லவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: