கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள்

ஈரோடு, ஜூலை 23:  ஈரோட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்திக்கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.ஈரோடு வீரப்பன்சத்திரம் சுக்கிரமணியவலசு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (38). இவர், தறிபட்டறை தொழிலாளி. இவரது மனைவி சீதா(27). இவர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள் உள்ளனர். சீதாவும் அதேபகுதியில் உள்ள தறிபட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார்.அப்போது, அங்குள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரபு என்பவருடன் சீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சீதா கணவரை விட்டு பிரிந்து, மூன்று மகன்களையும் ஈரோடு அசோகபுரம் ராஜ வீதியில் வசித்து வரும் அவரது பெற்றோரிடம் விட்டுவிட்டு, பிரபுவுடன் சங்ககிரியில் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், சீதா கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஈரோட்டில் உள்ள அவரது மகன்களையும், பெற்றோரையும் பார்க்க வந்தார். அன்று மாலை சீதாவும், அவரது தாய் ரேணுகாவும் (50) ஜவுளி கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.ஈரோடு வீரப்பன் சத்திரம் 16 ரோட்டில் நடந்து வந்த போது அங்கு வந்த சீதா கணவர் நாகராஜ், சீதாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தகாத வார்த்தையால் பேசினார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீதாவை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சீதா மயங்கி விழுந்தார்.

இதைத்தடுக்க சென்ற தாய் ரேணுகாவையும் கத்தியால் குத்திவிட்டு நாகராஜ் தப்பிச்சென்றார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து சீதா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் பட்ட ரேணுகா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து, மனைவியை கொலை செய்த நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இதை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும், தகாத வார்தையால் பேசுதல், மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக கூடுதலாக 5 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Related Stories: