ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று இரவு பூச்சாட்டுதல் விழா

சேலம், ஜூலை 23:  ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட மாநகரில் உள்ள  மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் இன்று இரவு பூச்சாட்டு விழா நடக்கிறது.ஆடி மாதம் பிறந்தாலே சேலம் மாநகரில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் திருவிழா களைக்கட்டும். சேலம் கோட்டை மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா எடுப்பது வழக்கம். கோட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடப்பதால், நடப்பாண்டு ஆடிப்பெருவிழா, ஆடித்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடித்திருவிழாவில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு இன்று (23ம்தேதி) இரவு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. காலை 10.30 மணிக்கும், பகல் 12.30 மணிக்கும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சோழ வேளாளர் சமூக டிரஸ்ட் சார்பில் அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது.கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டு விழா நடைபெற்று, அதன்பிறகு மாநகரத்தில் உள்ள பட்டைகோயில் சின்னமாரியம்மன் கோயில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில், குகை காளியம்மன், மாரியம்மன் கோயில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயில், பலபட்டரை மாரியம்மன் கோயில், நஞ்சம்பட்டி மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி மாரியம்மன் கோயில், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன் கோயில், சஞ்சீவிராயன்பேட்டை காளியம்மன் கோயில் உள்பட சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டு விழா நடக்கிறது.

ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி காலை, பகல், இரவு அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 8.30 மணிக்கு கிச்சிப்பாளையம் குலாலர் ஸ்ரீநடராஜர் பஜனை மட பக்த ஜன சங்கத்திலிருந்து காளியம்மனை கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் வைபவம் நடக்கிறது. 6ம் தேதி இரவு முழுவதும் அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல், 7 மற்றும் 8ம் தேதிகளிலும் பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதலும், 13ம் தேதி பகல் 12 மணிக்கு பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், 1008 லிட்டர் பால் மற்றும் தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி அபிஷேகம், அன்னபிஷேகம், அன்னதானம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடக்கிறது.

Related Stories: