ஜலகண்டாபுரம் அருகே முறையான குடிநீர் விநியோகம் கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

சேலம், ஜூலை 23: ஜலகண்டாபுரம் அருகே முறையான குடிநீர் விநியோகம் கேட்டு, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஜலகண்டாபுரம் அடுத்த ஆவடத்தூர் சத்தியா நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு சுழற்சி முறையில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்தாலும், குடும்பத்திற்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முறையாக குடிநீர் விநியோகம் கேட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது, அதிகாரிகள் எங்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். எனவே, முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டு, நேற்று முன்தினம் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்தோம். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: