ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு

சேலம், ஜூலை 23: ஓசூர் சர்வதேச மலர் ஏல மையம் மற்றும் மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், மேட்டூர் உபரிநீரை ₹565 கோடி மதிப்பில் 100 ஏரிகளில் நிரப்பப்படும் என தெரிவித்தார். இந்த இரு திட்டங்களுக்கும் வரவேற்பு தெரிவித்துள்ள விவசாயிகள், நேற்று ஓமலூருக்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தோட்டக்கலை கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், ‘‘ஓசூரில் மலர் ஏல மையம் அமைப்பதன் மூலம் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வசதி உள்ளதால், உலக அளவில் மலர் ஏற்றுமதி செய்ய முடியும். இத்திட்டத்திற்கு 24 மணி நேரத்தில் முதல்வர் ஒப்புதல் தெரிவித்தார். தற்போது மலர் சாகுபடியில், வருடத்திற்கு ₹200 கோடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதார், ₹500 கோடியாக உயரும்,” என்றார். இதேபோல், ஓமலூர் பகுதி விவசாயி மோகன் என்பவர் கூறுகையில், ‘‘இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை அமைத்தால் கூட தண்ணீர் வருவதில்லை. ஒருமுறை ஏரி நிரம்பினால், அடுத்த 3 வருடத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கும். ஒரு போக விவசாயத்திற்கே தவித்து வரும் நிலையில், உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 3 போகம் விவசாயம் மேற்கொள்ள முடியும்,’’ என்றார்.

Related Stories: