×

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 23:  கிருஷ்ணகிரியில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சோமேஷ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகேஷ், துணை தலைவர் நித்தியானந்தம் வரவேற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் முத்துக்குமரன், மாநில செயலாளர் முருகேசன்  ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் கிருஷ்ணன் கண்டனவுரையாற்றினார். ரேஷன் கடை பணியாளர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொது விநியோகத்திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்கள், எவ்வித நிபந்தனையுமின்றி பணிவரன் முறை செய்ய வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும். பழுதடைந்த கோணிப்பைகளுக்கு பணியாளர்களிடம் பணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். மருத்துவப்படி ₹300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர்.  முன்னதாக, பழையபேட்டை காந்தி சிலையில் இருந்து பேரணியாக அண்ணா சிலைக்கு வந்தனர். இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது