வேங்கூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மேல்நிலைநீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

திருச்சி, ஜூலை 22:வேங்கூரில் தலைவிரித்தாடும்குடிநீர் பிரச்னையை தீர்க்க 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் அல்லூரைச் சேர்ந்த நவநீதன் அளித்த மனுவில், ‘அல்லூர் ஊராட்சியில் கிராம அங்காடி அருகில் கடந்த 2 ஆண்டுக்கு முன் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டப்பட்டது. கழிவறையில் தண்ணீர் இல்லை. மின்வசதி இல்லை. கட்டி முடித்து 2 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கும் திறக்கவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் கடந்த ஆண்டு முறையிட்டும் பிடிஓ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கழிவறையை சீரமைத்து, தண்ணீர், மின்வசதியுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.நல்லூர் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘திரணிப்பாளையத்திலிருந்து சிறுகளப்பூர் வரையிலும் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைத்து தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலைசிவசூரியன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேங்கூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதுதொடர்பாக கிராமசபை கூட்டத்திலும், கலெக்டரிடமும் ஏற்கனவே முறையிட்டுள்ளோம். வீடுகளின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்துவிட்டது. எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தரவேண்டும். கலைஞர் காலனி பகுதியில் குடியிருக்கும் 19 ஏழை விவசாய கூலி ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 23 பேருக்கும் பட்டா வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: