×

குடும்ப பிரச்னையில் தவிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு கலந்தாய்வு திருச்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும்

திருச்சி, ஜூலை 23: சிறுபான்மையினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்றான முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் சிறுபான்மையின சமுதாயமான முஸ்லிம் மகளிர் சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்ட வகை செய்யும் பொருட்டு, பல்வேறு பயிற்சிகள் அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு சமூகநல வாரிய கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் குடும்ப நல ஆலோசனை மையங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், குடும்ப பிரச்சினைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்படுவதுடன் வரதட்சணை கொடுமைகளிலிருந்து மீட்கவும் குடும்பத்தில் பெண்களாலேயே இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து காக்கவும், கணவர், மாமியார் மற்றும் இதர குடும்பத்தாருடன் ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, தமிழ்நாடு சமூக நல வாரிய ஆலோசனை மையங்கள் மூலம் பிரத்யேகமாக முஸ்லிம் மகளிர்குடும்ப நல கலந்தாய்வு திருச்சி கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமூக நலத்துறை சார்ந்த ஆலோசகர்கள் வருகை புரிந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.எனவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூக பெண்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி