×

முசிறி, தொட்டியம் பகுதிகளில் இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பில் குளறுபடி பொதுமக்கள் பாதிப்பு

தா.பேட்டை, ஜூலை 23: முசிறி, தொட்டியம் பகுதிகளில் புதிதாக ஆதார் அட்டை எடுக்க வருபவர்கள் சர்வர் சரிவர கிடைக்காததால் பெரிதும் அவதியடைகின்றனர். இதனை சரிசெய்ய திருச்சி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி வட்டாட்சியர் அலுவலகம், தேசியமயமாக்கபட்ட அரசு வங்கிகளில் இ-சேவை மூலம் ஆதார் அட்டை புதிதாக எடுப்பது, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தாலுகா அலுவலகங்களில் பெரும்பான்மையான நேரம் சர்வர் தொடர்ந்து கிடைக்காததால் ஆதார் எடுக்க வரும் பயனாளிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, முசிறி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் சர்வர் இணைப்பு சரிவர கிடைப்பதில்லை. அரசு வங்கிகளில் குறைந்த அளவு பயனாளிகளுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து விண்ணப்பிக்கப்படுகிறது. சர்வர் இணைப்பில் ஏற்படும் பிரச்சனையினால் ஆதார் எடுக்க வரும் கூலித்தொழிலாளர்கள் குறைந்த பட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு வரவேண்டியுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் புதிய ஆதார் விண்ணப்பிக்க வரும்பொழுது பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் தமிழில் இருந்தால் அதனை கணினி ஏற்றுக்கொள்வதில்லை. எனவே மாணவர்களுக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்க பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்புச்சான்றிதழை ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இருப்பினும் செம்மொழியான தமிழ் மொழியை இ-சேவை மைய கணினி ஏற்றுக்கொள்ளும் வகையில் தலைமை அலுவலகம் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் எடுப்பதற்கான ஊழியர் பணியில் உள்ளார். ஆனால் பணியை மேற்கொள்ள கம்ப்யூட்டர்தான் இல்லை. இதனால் ஆதார் அட்டைக்கான எவ்வித பணிகளும் மேற்கொள்வதில்லை. கம்ப்யூட்டர் இருந்தால் சர்வர் இல்லை. சர்வர் இருந்தால் கம்ப்யூட்டர் இல்லை என்ற நிலையில் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் பொதுமக்களை இம்சிக்கும் மையமாகவே இருக்கிறது என்றும் கூறும் நிலையில் உள்ளது. எனவே திருச்சி கலெக்டர் இ-சேவை மையங்களில் பணிகள் சரிவர நடைபெற இ-சேவை மையங்களில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்று கூறினார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி