×

திருட்டுத்தனமாக விற்க மதுவாங்கி சென்றவரை மறித்து வழிப்பறி கும்பல் அபகரிப்பு புகார் அளிக்க முடியாமல் தவிப்பு

தா.பேட்டை, ஜூலை 23: முசிறி அருகே அரசு அனுமதியின்றி திருட்டுதனமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற நபரை தாக்கி அவரிடமிருந்த 120 மதுபாட்டில்களை வழிப்பறி கும்பல் அபகரித்தது. இதனால் புகார் கொடுக்க முடியாமல், வெளியிலும் சொல்ல முடியாத நிலையில் தவித்த நபரை அவரது நண்பகள் கேலி செய்தனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் ஒருவர் 96 குவாட்டர் பாட்டில்களும், 24 ஆப் பாட்டில்களும் திருட்டு தனமாக பதுக்கி வைத்து விற்பதற்காக வாங்கியுள்ளார். அதனை அட்டை பெட்டியில் வைத்து மொபட்டில் கொண்டு சென்றுள்ளார். தண்டலைப்புத்தூரிலிருந்து அய்யம்பாளையம் செல்லும் வழியில் உள்ள அரசு பள்ளி அருகே வந்தபோது மதுபாட்டில்கள் வாங்கிச் சென்ற நபரை வழி மறித்த இருவர் அவரை தாக்கி மதுபாட்டில்கள் அடங்கிய அட்டை பெட்டிகளை அபகரித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு அய்யம்பாளையம் சென்று நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் கூறியுள்ளார். திருட்டுதனமாக விற்பதற்காக வாங்கி வந்த மதுபாட்டில்களை வழிப்பறி திருடர்களிடம் பறிகொடுத்ததால் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற பழமொழியை உண்மையானதை எண்ணி நண்பர்கள் கேலிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுபாட்டில்களை அபகரித்து பறித்து சென்ற சம்பவம் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ