மணப்பாறை அருகே குளத்தில் தண்ணீர் எடுத்த 2 டிராக்டர்கள் சிறைப்பிடிப்பு பொதுமக்கள் போராட்டம்

மணப்பாறை, ஜூலை 23: மணப்பாறை அருகே குளத்தில் தண்ணீர் எடுத்த டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சிமாவட்டம் மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லாம்பிள்ளை குளம் உள்ளது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்றி வறண்டு காணப்பட்ட இக்குளத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் நல்லாம்பிள்ளை குளத்தில் தனியார் சாலை பணிகளுக்காக சிலர் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி டிராக்டரில் கொண்டுசெல்வதாக கூறி அப்பகுதி மக்கள் 2 டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வறண்டு இருந்த குளத்தில், தற்போது பெய்த மழையால் தான் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இந்த குளத்து நீர் மூலம் தான் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டு ஏதோ ஓரளவு குடிநீர் தட்டுப்பாடுன்றி கிடைப்பதாகவும், கால்நடைகளுக்கு சிரமமின்றி தண்ணீர் உள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள், குளத்து நீரை எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்விடும் இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும் புகார் கூறினர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிராக்டரில் இருந்த தண்ணீரை மீண்டும் குளத்தில் திறந்து விட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை அடுத்து கலைந்துசென்றனர்.

Related Stories: