திருச்சி மத்திய மண்டலத்தில் அனுமதியின்றி குவாரியில் வெடி வைத்தால் உரிமம் ரத்து டிஐஜி கடும் எச்சரிக்கை

திருச்சி, ஜூலை 23: திருச்சி மத்திய மண்டலத்தில் அனுமதியின்றி குவாரியில் வெடி வைத்தால் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி காவல் சரகமானது திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 5 மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 62 கல் குவாரிகளும், கரூர் மாவட்டத்தில் 74 கல் குவாரிகளும் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் 14 கல் குவாரிகளும் உள்ளன. இக்குவாரிகளில் பாறைகளை பிளப்பதற்கும் வெடிபொருளை வெடிக்க வைக்கவும் அதற்கென சான்றிதழ் பெற்ற வெடி வைப்பவர்களை (Licensed shot Firer) மட்டுமே வைத்து வெடிக்க வேண்டும்.வெடி வைப்பவர்கள் வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் முறையாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெடி மருந்துகளை நிரப்புவது மற்றும் வெடிக்க வைப்பது ஆகிய செயல்களை அதற்கென வெடி வைப்பவர் சான்றிதழ் பெற்றவரை கொண்டே செய்ய வேண்டும்.பயிற்சி பெறும் உதவியாளர்கள் மற்றும் சான்றிதழ் பெறாத மற்ற நபர்கள் சான்றிதழ் பெற்ற வெடி வைப்பவரின் மேற்பார்வையில் தான் செயல்பட வேண்டும். வெடி வைப்பவர் சான்றிதழ் வைத்திருப்பவர் அனுமதி பெற்ற வெடி மருந்து விற்பனையாளரிடமிருந்து பெற்ற வெடி மருந்து பொருட்கள் மற்றும் வெடித்து முடித்த வெடி மருந்துகள் பற்றிய பதிவேட்டினை தினமும் பராமரிக்க வேண்டும்.இந்த பதிவேட்டினை 5 வருடத்திற்கு பராமரிக்க வேண்டும். வெடி வைக்கும்போது வெடி வைப்பவர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட சட்ட விதிமுறைகளை தவறாது அனைத்து வெடி வைப்பவர்கள், வெடிமருந்து பொருள் வியாபாரிகள் மற்றும் வெடிமருந்தை கையாள்பவர்கள் கடைபிடிக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கல்குவாரி மற்றும் வெடிமருந்து கடைகளை மூட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்படும் என டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: