நச்சு புகையால் கண்எரிச்சல், சுவாசகோளாறு கழிவுஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓமாந்தூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார்

திருச்சி, ஜூலை 23: திருச்சி ஓமாந்தூரில் இயங்கி வரும் கழிவு எண்ணெய்சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் கண்எரிச்சல், சுவாசகோளாறு போன்ற வியாதிகள் ஏற்படுவதால் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருச்சி செந்தண்ணீர்புரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘அரியமங்கலம் 27வது வார்டு செந்தண்ணீர்புரம் வட பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் 60 ஆண்டாக குடியிருக்கும் 40 வீடுகளுக்கு எல்லா ஆவணங்களும் இருந்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.மனிதநேய ஜனநாயக கட்சியினர் அளித்த மனுவில், ‘திருச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடமும், அவர்களது உறவினர்களிடமும் செவிலியர்கள் தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். ஓமாந்தூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘ஓமாந்தூரில் இயங்கி வரும் கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் நச்சு வாயுவால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சுவாச பிரச்னை, நெஞ்சு, கண் எரிச்சல் மற்றும் இருமல் போன்ற பல்வேறு வியாதிகளை உண்டாக்குகிறது. இந்த ஆலை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். துறையூர் தாலுகா அம்மாப்பட்டி கிராமத்தில் செல்வமகா மாரியம்மன் கோவிலில் கிராம மக்கள் பூஜை செய்து வழிபாடு செய்ய இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Related Stories: