மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்ககோரி சிஐடியூ தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூலை 23: கீழமுல்லைகுடியில் மாட்டுவண்டி மணல் குவாரியை திடீரென மூடியதை கண்டித்தும், மணல் குவாரியை திறக்ககோரியும் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு தனி குவாரி திறக்க வேண்டும் என மணல் மாட்டுவண்டி உரிமையாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் கீழமுல்லைகுடியில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென குவாரி மூடப்பட்டது. இதனால் மணல் மாட்டுவண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தோடு போடப்பட்ட ஒப்பந்தப்படி கொண்டையம்பேட்டை, லால்குடி, முருங்கப்பேட்டை, பெட்டவாய்த்தலை மணல் குவாரியை திறக்க வேண்டும்.

கீழமுல்லைகுடி மாட்டுவண்டி மணல் குவாரியை மூடியதன் மர்மம் என்ன என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை விளக்கம் அளிப்பதுடன், மூடப்பட்ட மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சார்பில் திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் குடும்பத்துடன் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். இதில் மாட்டு வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.முன்னதாக தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் சிவராசுவிடம் அளித்தனர்.

Related Stories: