தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அதிரடி கைது

திருக்கோவிலூர், ஜூலை 23:திருக்கோவிலூர் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கனகநந்தல் சாலையில் சத்யா என்பவர் தனியாக மொபட்டில் சென்ற போது, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர் நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதேபோன்று சந்தைப்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 மர்ம நபர்கள் அவரை மிரட்டி பணம் பறித்துச் சென்றனர். இந்த தொடர் சம்பவங்களையடுத்து திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.திருக்கோவிலூர் பைபாஸ் ரோடு, திருவண்ணாமலை சாலையில் ரோந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேரை மடக்கினர். போலீசாரை கண்டவுடன் இருவரும் பைக்கை போட்டுவிட்டு தப்பியோடினர். உடனே இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, முன்க்குப்பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தங்கவேல் (32), மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை (27) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த ஒரு வாரமாக நோட்டமிட்டு ஆளில்லாத பகுதியில் தனியாக வரும் ஆண்கள் மற்றும் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றதாக தெரிவித்தனர். மேலும் திருக்கோவிலூர் பகுதியில் சத்யா, மணிகண்டன் ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வழக்குகளும், விழுப்புரம் மாவட்டத்தில் வடபொன்பரப்பி, திண்டிவனம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கவேல், அண்ணாமலை ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: