முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு சிலை

புதுச்சேரி, ஜூலை 23:   புதுச்சேரியில் ஆர்.வி.ஜானகிராமனுக்கு சிலை வைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  புதுச்சேரி சட்டசபையில் ஆர்.வி.ஜானகிராமன் மறைவுக்கு   இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசுகையில்,  1941ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி ஆர்.வி.ஜானகிராமன்  வில்லியனூரில்  பிறந்தார். 1960ம் ஆண்டில்  இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் கீழ் பணியாற்றியவர்,   

திமுக அமைப்பாளராக 1993 முதல் 2012 வரை இருந்தவர். தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர். இலவச பேருந்து பயணச்சீட்டு  வழங்கி மாணவர் நலன் காத்தவர். அரசாங்கத்தால் தாலிக்கு தங்கம்  பெற்றவர்களுக்கு கூரை சேலை அளித்தவர்.   நெல்லித்தோப்பு தொகுதியில் தொடர்ந்து 5  முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். 27.6.96 முதல் 23.1.2000 வரை  10வது சட்டப்பேரவையில் முதல்வராக இருந்தார். இத்தகைய பெருமைவாய்ந்த  ஆர்.வி.ஜானகிராமன் தனது 78வது வயதில் 10.6.2019 அன்று இயற்கை எய்தினார்.  அவரது மறைவு குடும்பத்தாருக்கும், திமுகவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது  மறைவுக்கு சட்டபேரவை ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்து  கொள்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து  கட்சியினருடன் டெல்லி சென்றபோது, காரைக்கால் புதுச்சேரியை இணைத்து மாநில  அந்தஸ்து தருவதாகவும், மாகே, ஏனாமை தவிர்த்து விடுமாறு அப்போதைய உள்துறை அமைச்சர்  இந்திரஜித் குப்தா தெரிவித்தார்.  இதனை ஏற்க மறுத்து அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். புதுச்சேரிக்கு ஒருங்கிணைந்த  மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். புதுச்சேரியில் மேலவை தேர்தல்  நடைபெற்ற போது, திமுக சார்பில் திருநாவுக்கரசரும், காங்கிரஸ் சார்பில்  நானும் போட்டியிட்டேன்.  அப்போது காங்கிரசுக்கு 9 உறுப்பினர்கள்தான்  இருந்தனர். ஆனால் 12 வாக்குகள் வாங்கி நான்  வெற்றி பெற்றேன். அந்த 3  வாக்குகளை எப்படி பெற்றாய் என அவர் கேட்பார். அது பரம ரகசியம் என்று  நான் கூறினேன். அவருக்கும் எனக்கும் தொடர்ந்து அறிக்கை போர் நடக்கும்.

ஆனால்  எல்லை மீறி பேசியது கிடையாது. ஒருமுறை தவறுதலாக உணர்ச்சிவசப்பட்டு என்னைப்  பற்றி பேசினார். ஆனால் நான் அதற்கு   பதில் அளிக்கவில்லை. என்  வீட்டுக்கு நேரடியாக வந்த அவர் நான் அப்படி பேசியிருக்க கூடாது. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் என கூறினார். நான் அதை பெரிதாக எடுத்துக்  கொள்ளவில்லை என அவரிடம் தெரிவித்தேன்.  புதுச்சேரி ஆட்சியாளர்கள் நல்லவராக இருப்பதோடு  வல்லவராகவும் இருக்க வேண்டும் என அறிவுரை சொன்னவர். நான் அடிக்கடி அவரை  வெளியூர்காரர் என்று பேசுவேன். ஆனால் அவர் நான் புதுச்சேரியில் தான்  பிறந்தேன் என்று  கூறுவார். அவரது மக்கள் சேவையை பாராட்டி அவரது உடல் முழு  அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சிலை வைக்க வேண்டும் என  அனைத்து எம்எல்ஏக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே  முன்னாள் முதல்வர்கள் எம்.ஓ.எச். பரூக், சண்முகம் ஆகியோருக்கு சிலை  வைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தேன். அதை தொடர்ந்து ஆர்.வி.ஜானகிராமனுக்கும் சிலை  அமைக்கப்படும். முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைப்பது  தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  

 அப்போது குறுக்கிட்டு  பேசிய அன்பழகன், உங்கள் அரசியல் எஜமானர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக  ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கும் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  உயர்ந்த எண்ணத்தோடு செயல்படுங்கள். ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சிலை  வைக்கப்படும் என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்.  அவருக்கும் சிலை  வைக்க வேண்டும், என்றார். அதற்கு முதல்வர் ராயணசாமி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: