உள்ளாட்சி தேர்தல் ஆணையர் விளம்பர அறிவிப்பு ரத்து

புதுச்சேரி, ஜூலை 23: நீர்வள பாதுகாப்புக்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிய முதல்வர் நாராயணசாமி தயாரானார். அப்போது ஒரு குறிப்பிட்ட பிரச்னையை எழுப்பி அரசு கொறடா அனந்தராமன் பேசுகையில்,    கடந்த 8ம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில ஆணையரை நியமிப்பது தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது. 1994ல் இதற்கான விதிகள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்த விளம்பரம் வந்தது அமைச்சருக்கு தெரியுமா? இந்த விளம்பரம் உள்நோக்கத்துடன் வந்த மாதிரி தெரிகிறது. இதற்கான விளக்கத்தை சபாநாயகர் பெற்று தர வேண்டும்.

 அமைச்சர் நமச்சிவாயம்:  உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்தல் ஆணையரை நியமிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு, முதல்வர் வழியாக உள்ளாட்சித்துறை மூலம் கோப்பு அனுப்பப்பட்டது. ஒரு வருடம் கழித்து கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் திடீரென்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரம் வருவதற்கு முன்பு என்னையோ, முதல்வரையோ கலந்தாலோசிக்காமலும், ஒப்புதல் பெறாமலும், அவர்களே ஒரு விதியை போட்டு ஆணையரை நியமிக்க பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கவர்னர் தனியாக முடிவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். சபாநாயகர் அந்த கோப்பை வரவழைத்து முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

 அரசு கொறடா அனந்தராமன்:  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையும் மீறி இப்படி ஒரு செயல்,  சட்டமன்ற மாண்பை குலைக்கின்ற செயலாகும். இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதிமுக பாஸ்கர்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கவர்னர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இனிமேல் யாராவது கவர்னர் கூறுவதை கேட்டு செயல்பட்டால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். தற்போது எழுந்துள்ள பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிமை மீறல் குழு விசாரித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும். இந்த விசாரணை நடைபெறும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்.     

 

 அதிமுக அன்பழகன்: தேர்தல் ஆணையர் பதவி என்பது நாமினேட் பதவி. அதனை வெளிப்படையாக தேர்வு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது தவறு. இதில் கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. இதில் நாங்கள் குறுக்க நிற்க போவதில்லை. அதேநேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. ஏற்கனவே என்ன? நடைமுறை இருந்ததோ அதனை பின்பற்றி தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும். அனைத்து வார்டுகளை மறுசீரமைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.  சாமிநாதன் பாஜக: உள்ளாட்சி தேர்தலை மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். இதன் மூலம் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி பெற வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் தடையாக இருக்காது. தற்போது தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட்டாலும் அதனை ஆதரிக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் நமச்சிவாயம்: உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் புதுவைக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என சாமிநாதன் கூறியது தவறு. மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி உறுப்பினராக இல்லை, இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும் நிதி வராது. நான் ஏற்கனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட்டு மத்திய அரசிடமிருந்து ரூ.547 கோடியை கேட்டேன். அப்போதுதான் இந்த கதையை சொன்னார்கள். தற்போதுவரை அதே நிலைதான்  தொடர்கிறது.  நிதிக்குழுவில் புதுவையை உறுப்பினராக சேர்க்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நமக்குள் அதிகார பகிர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம்.

 முதல்வர் நாராயணசாமி: உள்ளாட்சி தேர்தல் ஆணையர் தொடர்பான அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல் மாநில அதிகாரத்தில் உள்ளது. எனவே நானும், அமைச்சர்களும் 25.5.2018ம் ஆண்டு அமைச்சரவையில் முடிவு செய்து, பாலகிருஷ்ணன் என்பவரை பரிந்துரை செய்து கோப்பு அனுப்பினோம். எனவே கடந்த 1ம் தேதி  நீங்கள் பரிந்துரை செய்ததை ஏற்க முடியாது, வெளியிலிருந்து ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என கவர்னர் தெரிவித்தார். அமைச்சரவைக்குதான் அதிகாரம் உள்ளது. அதனை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவை பரிந்துரைப்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். இந்த அறிவிப்பு சம்பந்தமாக யார்? யார்? விதிமுறைகளை மீறியிருக்கிறார்கள். யாரெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதுசம்பந்தமாக கோப்பை வாங்கி பார்த்து நடவடிக்கை வேண்டும். சபாநாயகர் சிவக்கொழுந்து: உள்ளாட்சி தேர்தல் பிரச்னை தொடர்பான கோப்பை தலைமை செயலர் அல்லது செயலர் அல்லது இயக்குநர் ஆகியோர் அமைச்சர் மூலமாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிடுகிறேன். மேலும், உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம் சம்பந்தமாக அமைச்சரவைக்கோ, அமைச்சருக்கோ, முதல்வருக்கோ தெரியாது என்று சொல்கின்றனர். அது எப்படி துறை அமைச்சருக்கு கூட தெரியாமல் விளம்பரம் கொடுக்கலாம். உள்ளாட்சித்துறை அமைச்சர் கொடுத்த பதிலை பார்க்கும்போது, சட்டத்துறை ஒப்புதல் பெறாமலும், சட்டமன்றத்துக்கு கூட தெரிவிக்காமல் சட்டதிட்டங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்பது நிதர்சனமாக தெரிகிறது. சட்ட நடைமுறைகளை மீறி பேரவைக்கான உரிமையை தனி நபரோ, அவர் சார்ந்த குழுவோ கையில் எடுத்து கொள்ள முடியாது. அதனை இந்த மாமன்றம் அனுமதிக்காது.   இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டங்கள் மக்களுக்காக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் உருவாக்கப்படுகின்றன. நிர்வாக துறையால் சட்டங்கள் செயல்பட்டால் கூட அவை நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டபேரவையிலோ வைக்கப்பட்டு அந்த சட்டங்கள் எல்லாம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்கக் கூடிய நடைமுறையும், விதிகளும் உள்ளது. இது பொதுமக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாப்பு.

  அமைச்சரவைக்கு தெரிவிக்காமலும், அரசிதழில் போடாமலும், விதிகளுக்கு எதிராகவும், ஏற்கனவே உள்ள நடைமுறைக்கு எதிராகவும் வந்துள்ள உள்ளாட்சி தேர்தல் ஆணையர் விளம்பரத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துபடி ரத்து செய்கிறேன். அமைச்சரவை உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகள் மீறப்பட காரணமாக இருந்தவர்கள் யார்? என்று அமைச்சரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: