×

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை

விருத்தாசலம், ஜூலை 23:விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள முகாசபரூர் ஊராட்சியில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசதி படைத்த பலர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பில் இருந்து சொந்த செலவில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் ஒரு சிலர் மட்டுமே குடிநீரை ஏகபோகமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் பெரும்பான்மையான பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர்.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் தலைவர் பரமசிவம் தலைமையில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, அப்பகுதியில் அனுமதியின்றி பெறப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இன்னும் ஓரிரு நாட்களில் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது