×

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் தங்குவதில் பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வர காலதாமதம்: அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூலை 23: வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் தங்குவதில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒரு மாதம் பரோலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், நளினி ஒரு மாத பரோலில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து சிறை நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கிடையில், நளினி கடந்த 16ம் தேதி பரோலில் வருவதாக தகவல் ெவளியானது. அதன்பிறகும் வெளியே வரவில்லை. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஒரு மாத பரோலில் செல்லும் நளினி தங்கும் இடம், பாதுகாப்பு காரணங்கள் குறித்த அறிக்கை சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பரோல் தொடர்பான எந்தவொரு தகவலும் வரவில்லை.வேலூர் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாலும் பாதுகாப்பு அளிப்பதில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நளினிக்கு பரோல் முடிவு தொடர்பான உத்தரவை வேலூர் சிறை நிர்வாகம் வழங்கலாமா அல்லது சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்ற பின்னர் பரோல் வழங்கப்பட வேண்டுமா? என்பது குறித்தும் தெரியவில்லை’ என்றனர்.

நளினி பரோல் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை.வேலூர் மத்திய சிறையில் இருந்து தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டபோது, மாவட்ட போலீசாருக்கும் தெரியாமல் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, நளினி பரோலில் வெளியே வருவதை யாருக்கும் தெரியாமல் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...