×

ராணிப்பேட்டை, ஆம்பூரில் கார், மினி வேனில் கொண்டு சென்ற ₹3.56 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

வேலூர், ஜூலை 23: ராணிப்பேட்டை, ஆம்பூரில் கார் மற்றும் மினி வேனில் கொண்டு சென்ற ₹3.56 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பை பாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிகுமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாலாஜாவில் இருந்து ஆற்காடு நோக்கி வேகமாக வந்த காரில் சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி ₹2.50 லட்சம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆற்காட்டை சேர்ந்த யூதாராம்(34) என்பதும், அவரது ஆட்டோ மொபைல்ஸ் கடையில் வசூலான பணத்தைதான் வீட்டிற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஆம்பூர் அருகே மாதனூர் மேம்பாலம் வழியாக வந்த மினி வேனை சோதனையிட்டதில் குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(50), உரிய ஆவணங்களின்றி ₹1 லட்சத்து 5 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனர். மொத்தம் ₹3.56 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியன்பேட்டை, சேர்க்காடு உள்ளிட்ட இடங்களிலும் பறக்கும்படை 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...