×

அடிப்படை வசதிகளை ெசய்துதர வலியுறுத்தி அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர், பொதுமக்கள் போராட்டம்: பேரணாம்பட்டில் பரபரப்பு

பேரணாம்பட்டு, ஜூலை 23: பேரணாம்பட்டில் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 286 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 12 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்துவதில்லை என தெரிகிறது. இதனால் பள்ளியில் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக புகார் உள்ளது.மேலும் பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பள்ளியில் இந்தாண்டு மாணவர்களின் சேர்க்கையும் குறைந்துவிட்டது.இந்நிலையில் மாணவ, மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால் வகுப்பறைக்கு செல்லாமல், பெற்றோர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் பள்ளிக்கு பூட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வந்து அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.இதையடுத்து, தகவலறிந்த எம்எல்ஏ காத்தவராயன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வேணுசேகரன் மற்றும் அதிகாரிகள் காலை 10.30 மணியளவில் அங்கு வந்தனர். இதுகுறித்து நாளை(இன்று) இப்பகுதியில் நீர்வளம் பார்த்து போர்வெல் அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.அதன்பேரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பூட்டிய பள்ளி கேட்டை திறந்தனர். பின்னர், 11 மணியளவில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டில் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள். உள்படம்: பள்ளி கேட்டுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...