துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் சர்ச்சை கருத்து முதல்வர் வருத்தம் தெரிவிக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி  துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய வகையில் முதல்வர் கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டிய பல்வேறு கிராம மக்கள், இதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி  கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்து மனுக்கள் அளித்தனர்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த மக்கள் 100வது நாளான கடந்தாண்டு மே 22ம்  தேதி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் பொருட்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவங்களில் இரு பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் பலியாகினர். மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கடந்த வாரம் பேசினார். அப்போது அவர், தூத்துக்குடியில் போலீசார் வாகனம்  மீது ஏறி நின்று துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் கற்பனை கதை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டிய தூத்துக்குடி அடுத்த குமரெட்டியாபுரம், வீரபாண்டியாபுரம், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் இயக்கத்தினர் இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்து மனுக்கள் அளித்தனர்.  கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனுக்களில், இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ள கிராம மக்கள், முதல்வர் வருத்தம்  தெரிவிப்பதோடு, துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீசார்  மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: