×

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து அனைத்து விவசாய சங்கத்தினர் பேரணி திருவாரூரில் இன்று நடக்கிறது

திருவாரூர், ஜூலை 23 : தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஓ.என்.ஜி.சி மற்றும் தனியார் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு என மொத்தம் 274 இடங்களில் கிணறுகள் அமைப்பதற்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினை கண்டித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகளும், பொதுமக்களும் தினந்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில் இதற்காக போலீசார் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக தற்போது மீண்டும் 104 கிணறுகள் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்தும் அதனை ரத்து செய்ய கோரியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரினை கேட்டு பெறாத தமிழக அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் மேற்படி மாவட்டங்களில் பேரணி மற்றும் மனு அளிக்கும் போராட்டமானது இன்று (23ம் தேதி) நடைபெறுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த பேரணி நடைபெறுவதையொட்டி திருவாரூரில் இன்று காலை 11 மணியளவில் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்கின்றனர். பின்னர் அங்கு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுவும் அளிக்கின்றனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு