பெரியகுளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களை பாராட்டிய ஐகோர்ட் நீதிபதி

பேராவூரணி, ஜூலை 23: பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரும் பணியை பார்வையிட்டு இளைஞர்களை மதுரை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பாராட்டினார்.பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்பட்டது. வரத்து வாரிகளும் அடைப்பட்ட நிலையில் வறண்டுபோய் காணப்பட்ட இந்த குளத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர்வார முடிவெடுத்தனர்.இதையடுத்து அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்து கடந்த 30 நாட்களாக ஏரியை தூர்வாரி வருகின்றனர். மேலும் முதற்கட்டமாக பெரியகுளத்தின் கரைகளை உயர்த்தி, அகலப்படுத்தி செப்பனிட்டு கரைகளில் புங்கை, வேம்பு, பனை போன்ற மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.இதுகுறித்து அறிந்த மதுரை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் நேற்று முன்தினம் பெரிய குளத்துக்கு வந்து பார்வையிட்டார். அவரை பேராவூரணி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க அமைப்பினர் தங்க கண்ணன், கார்த்திகேயன், நவீன், ஆனந்த், நிர்மல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதையடுத்து முயற்சியை இடைவிடாமல் செய்யுங்கள், பலன் தானாகவே வந்தடையும். உங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு நீர் மேலாண்மையை எப்படி கடைபிடிப்பது என இளைஞர்கள் புரிந்து கொண்டு மழைநீர் சேகரிப்பை ஒவ்வொரு இளைஞனும் கையில் எடுத்தால் இப்பகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையே வராது. அதேபோல் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகள் மூலம் ஒவ்வொரு குளத்தையும் ஒவ்வொரு தொண்டு அமைப்புகள் தத்தெடுத்து தூர்வாரும் நிலையை உருவாக்க வேண்டும் உங்களுக்கு நிதி தேவையும் குறையும். விரைவாக வேலையும் நடைபெறும். அதற்கான முயற்சிகளையும் செய்யுங்கள். இப்பகுதியில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை சேமித்து கொள்ள குளத்தை தூர்வாரினால் குடிநீர் தேவைக்கும், பாசன வசதிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Related Stories: