×

தமிழக முதல்வரின் 100 ஏரிகள் திட்ட அறிவிப்பு காவிரி டெல்டாவை வஞ்சிப்பதாக உள்ளது பழனிமாணிக்கம் எம்பி குற்றச்சாட்டு

தஞ்சை, ஜூலை 23: தஞ்சை மக்களவை தொகுதி எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் தனது தொகுதியில் நடந்த மடிக்கணினி வழங்கும் விழாவில், மேட்டூர் உபரிநீரை சேமிக்க ரூ.565 கோடியில் 100 ஏரிகள் உருவாக்கப்படும். இதன்மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககரி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் பயன்பெறும் என்று கூறியுள்ளார். இது காவிரி பாசன பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது.மேட்டூர் அணை உபரிநீரை சேமிக்க 100 ஏரிகளை உருவாக்குவது என்பது காவிரி பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில் புதிய பாசன திட்டம் உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. எனவே தமிழக முதல்வர் இத்திட்டத்தை கைவிட்டு, ரூ.565 கோடியை தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர் வாருவதற்கு பயன்படுத்தினால் அவரது உயர்ந்த நோக்கம் நிறைவேறும்.மேட்டூர் அணை நிர்வாகம் தஞ்சை கலெக்டரிடமும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர்பாசன தலைமை பொறியாளரிடமும் இருந்தது. ஆனால் இப்போது மேட்டூர் அணையின் நிர்வாகம் முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு மாறிவிட்டது. மேட்டூர் அணையை திறப்பது குறித்த முடிவை அவரே மேற்கொள்கிறார். பழைய முறைப்படி மேட்டூர் அணை நிர்வாகத்தை தஞ்சை கலெக்டரிடமும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...