100 ஆண்டுகளுக்கு பிறகு பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள அகழியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

கும்பகோணம், ஜூலை 23: பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள அகழியில்100 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக மூலவர் பசுபதீஸ்வரரும், அம்பாளாக தாயார் காம்பணையதோளிம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற 35வது சிவாலயமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக சரக்கொன்றை மரமும், தீர்த்தமாக சூரியதீர்த்தமும் அமைந்துள்ளன. இந்நிலையில் 100 ஆண்டுகளாக கோயில் முன்புறமுள்ள அகழியை அழித்தும், தூர்த்தும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடியிருப்புகளையும், சாகுபடி செய்யும் வயலாகவும், மனைகளாகவும், தோட்டங்களாகவும் மாற்றி ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.அவர்களிடம் கோயில் சார்பில் பலமுறை அகழிக்கான இடங்களை கேட்டும் தரமறுத்ததால் பந்தநல்லூரை சேர்ந்த எங்கள் ஊர், எங்கள் பெருமை அமைப்பின் நிர்வாகி வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டில் அகழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழையவாறு அகழியை அமைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் அகழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் அகழி அமைத்து தண்ணீர் நிறுத்த வேண்டுமென உத்தரவிட்டார்இந்த உத்தரவையடுத்து திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று அகழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கியுள்ளனர்.இதுகுறித்து தாசில்தார் சிவக்குமார் கூறுகையில், பந்தநல்லூர் பசுபதீ–்ஸ்வரர் கோயிலை சுற்றியிருந்த அகழியை அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதை அகற்றி விட்டு மீண்டும் அகழியை அமைக்க வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், ஆர்டிஓ வீராசாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி நேற்று முதல் பசுபதீஸ்வர் கோயிலை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவில் 60 மீட்டர் அகலத்திற்குரிய அகழியின் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழங்காலத்தில் இருந்ததுபோல் அகழி அமைக்கவுள்ளோம்.பக்தர்கள், கோயிலுக்குள் செல்லும் வகையில் தரையில் குழாய் வைத்து மேலே பாலம் அமைக்கவுள்ளோம். கோயில் முன்புள்ள அகழிக்கு மண்ணியாற்றில் இருந்து தண்ணீர் வரும் பாதையும், தண்ணீர் நிரம்பியவுடன் மண்ணியாற்றிலேயே மீண்டும் தண்ணீர் வடியும் வகையில் பிரத்யேகமாக பழங்காலத்தில் அமைத்துள்ள பாதையில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த பணி 30 நாட்களில் முடிவடைய வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: