ஆகம விதிக்கு பாதிப்பில்லா வகையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய அத்திவரதரை விசாலமான இடத்தில் வைக்க வேண்டும்

கும்பகோணம், ஜூலை 23: ஆகம விதிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்திவரரை கோயில் வளாகத்திலேயே விசாலமான வேறு இடத்தில் இடம் ஒதுக்கி பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வணிகர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில்காஞ்சிபுரத்தில் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் விரைவாகவும், எளிமையாகவும் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக அத்திவரதர் தரிசனம் தரும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இதற்கு முன்னுதாரணமாக 1992ம் ஆண்டு வரை மகாமக பெருவிழா பல நூறு ஆண்டுகளாக ஒரே ஒருநாள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு மகாமக திருவிழா கொடியேற்று நாள் முதல் மக நட்சத்திர நாள் வரை 10 நாட்கள் மகாமக குளத்தில் புனித நீராட அனுமதிக்க வேண்டுமென குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆன்மிக பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று மகாமக குளத்தில் 10 நாட்கள் வரை நீராடலாம் என தமிழக அரசு அறிவித்தது.இதைதொடர்ந்து 2016ம் ஆண்டு மகாமக திருவிழா 10 நாட்களையும் கடந்து 60 நாட்கள் வரை நீண்டு 70 லட்சம் பக்தர்கள் வரை புனித நீராடினர். இதன்மூலம் சிறு அசம்பாவிதம் கூட நடைபெறாமல் மகாமக திருவிழா நிறைவடைந்தது. இந்த ஆக்கப்பூர்வமான மாற்றத்தை முன் உதாரணமாக எடுத்து கொண்டு தற்போது நடந்து வரும் அத்தி வரத தரிசனத்தையும், ஆகம விதிமீறலின்றி கோயில் வளாகத்திலேயே விசாலமான இடத்தில் வைத்து பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்ய தகுந்த ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: