வீரியங்கோட்டையில் பணிகள் முடிந்து 6 ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

சேதுபாவாசத்திரம், ஜூலை 23: சேதுபாவாசத்திரம் அருகே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும் புதிதாக அமைத்து பணிகள் முடிந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழையின்றி ஏரிகள் அனைத்தும் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதியில் அதிகளவு மினிடேங்குகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. மினி டேங்குகளுக்கு 200 முதல் 250 அடி ஆழத்தில் தான் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கு கீழே சென்றுவிட்டது.

இதனால் பெரும்பாலான மினி டேங்குகளின் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு நின்று விட்டது. இதனால் அனைத்து பொதுமக்களும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையே நம்ப வேண்டிய சூழ்நிலையில் மும்முனை மின்சாரம் சிப்ட் முறையில் வழங்கப்படுவதால் போதுமான தண்ணீர் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள வீரியங்கோட்டையில் மினி டேங்குகள் வறண்ட நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தான் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது.உள்ளாட்சி அமைப்பு இருக்கும்போதே குடிநீர் பற்றாக்குறையை போக்க கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஆழ்குழாய் கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மோட்டாரும் பொருத்தப்பட்டு பைப் லைன்கள் புதைக்கப்பட்டு வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை டேப்புகள் அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகிக்கவில்லை.இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பயனில்லை. இதுவரை குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் குடிநீர் தொட்டி ஒப்படைக்கவில்லையென கூறுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டுக்கு வராமல் பயன்னற்ற நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: