×

குரங்குகளுக்கு தின்பண்டங்கள் போடுவதை தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 23:
குரங்குகளுக்கு தின்பண்டங்கள் போடுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.புதுக்கோட்டை நகர் பகுதியில் குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. புதுக்கோட்டை நகரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து குரங்குகள் கூட்டம் கூட்டமாக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வீட்டில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துவதோடு, கையோடு எடுத்தும் சென்றுவிடுகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மட்டும் இருந்த இந்த பிரச்சனை தற்போது புதுக்கோட்டை நகரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது. மேலும் வயல்வெளி மற்றும் தோட்டங்களில் உள்ள செடிகள் மற்றும் மரங்களில் உள்ள காய் பழங்களையும் சேதப்படுத்துகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் குரங்குகளை கொல்லவும் தயங்குவதில்லை. கடந்த 2008-ம் ஆண்டு விராலிமலை பகுதியில் குரங்குகளுக்கு விஷம் வைத்து பிடித்து உயிருக்கு போராடிய நிலையில், சில குரங்குகளை புதுக்கோட்டை தஞ்சை சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை அருகே வந்து போட்டு விட்டு சென்றனர்.இதில் சுமார் 40 குரங்குகள் இறந்தன. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி பெருங்களூர் அருகே உள்ள கோயில் பகுதியில் சுற்றி திரிந்த 6 குரங்குகுகள் விஷம் கலந்து உணவை சாப்பிட்டதில் இறந்தன. கடந்த 2008ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டையில் இறந்து போன குரங்குகளின் நினைவாக அந்த இடத்தில் சிலர் சிறிய கோவில் கட்டி உள்ளனர்.அந்த வழியில் வாகனங்களில் செல்பவர்கள் குரங்குகளுக்கு பழம் மற்றும் தின்பண்டங்களை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குரங்குகள் இயற்கையாக தங்களுக்கு தேவையான உணவுகளை வனப்பகுதில் இருந்து எடுத்து கொள்ளும். ஆனால் இதுபோன்று மக்கள் தின்பண்டங்களை போடுவதால் அவை தானாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன. சிலர் செய்யும் தவறுகளால்தான் குரங்குகள் ஊருக்குள் வருகிறது. விலங்குகள் எப்போதும் இயற்கையில் இருந்து மாறுவதில்லை. மனிதர்கள்தான் இயற்கையோடு போட்டிபோடுகிறோம். வன விலங்குகளை காப்பது மட்டுமின்றி அவற்றை இயற்கையோடு ஒன்றியிருக்க நாம் உதவியாக இருந்தால் தான். அவை நமக்கு பிரச்சனைக்குறியதாக இருக்காது.எனவே பொதுமக்கள், குரங்குகளுக்கு தின்பண்டங்கள் போடுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகர் பகுதியில் சுற்றுத்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...