×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 457 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கொடுத்த மனுவில், அறந்தாங்கியில் வாரச்சந்தை நடைபெறும் இடம் தஞ்சாவூர் மாவட்டம் சத்திரத்திற்கு சொந்தமான இடமாகும். இந்த வாரச்சந்தையில் முன்பு ஒரு கடைக்கு ரூ.50 வாங்கினார்கள். தற்போது ரூ.200 வரை வசூல் செய்யப்படுகிறது. எனவே, இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.அவர் கொடுத்த மற்றொரு மனுவில், அறந்தாங்கி நகராட்சியில் தெரு வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் அரசின் பயோமெட்ரிக் கார்டை நகராட்சி மூலம் பெற்றுள்ளனர். இந்த வியாபாரிகள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, வியாபாரிகளை கந்து வட்டியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.அறந்தாங்கி தியாகி சின்னையா வேளார் தெரு பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கொடுத்த மனுவில்,
எங்கள் தெருவில் சுமார் 30 குடும்பங்கள் மண்டபாண்ட தொழில் செய்து வருகிறோம். தமிழக அரசின் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்டு, அதற்காக தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மழைக்கால நிவாரண தொகை மற்ற மாவட்டங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் மழைக்கால நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டையில் இருந்து போஸ் நகர், மணிப்பள்ளம் சாலை வழியாக பொற்பனைக்கோட்டை, மேலத்தோப்பு, பாப்பான்கொல்லை, கீழக்காயம்பட்டி, கணேசபுரம், ராயப்பட்டி, மாங்கனாம்பட்டி, செட்டியாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...