×

முன்னேற்ற திட்டங்களை பெண்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் அமைச்சர் வலியுறுத்தல்

காரைக்கால், ஜூலை 23: பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், காரைக்காலில் தனியார் கலையரங்கில், புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும் மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கூட்டத்தில் பங்கேற்ற 15 குழுக்களுக்கு ரூ.3 லட்சம் முதல் 9 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்கான கடனுதவியை வழங்கி பேசியதாவது:நாடெங்கும் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற வகையில் மத்திய அரசு, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும் மகிளா கிசான் யோஜனா ஆகிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் திறமைக்கான முழு வடிவம் பெறவேண்டும். அதன் தொழிநுட்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பயிற்சிகளை பெற வேண்டும் என்ற காரணத்தால்தான் வங்கியாளர்கள், கூட்டுறவு அமைப்பினர் என பல்வேறு தரப்பினரை அழைத்து திட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. நாட்டின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்றார்.
மகாத்மாகாந்தி. எல்லோருக்குமான வளர்ச்சிதான் காந்தியின் தத்துவம். கிராமம் முன்னேறவேண்டும், கிராமத்தினர் முன்னேறவேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களையும் புரிந்துகொண்டு, அதை செயல்படுத்த முன்வரும்போது வெற்றி சாத்தியமாகிறது. ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தும்போது, அது யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அவர்கள் பயனடைந்தால்தான் திட்டம் வெற்றிபெறும். பெண்கள், அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான புரிதல் ஏற்படவும், பயிற்சி பெறவும், பயிற்சியின் மூலம் அதற்கான தொழில்களை செய்யவேண்டும் என்பதுதான் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளாகும். சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை தரும். என்றார்.கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் சந்திரபிரியங்கா, கீதா ஆனந்தன், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ், ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறை துறை திட்ட இயக்குனர் ரவிபிரசாத், திட்ட அலுவலர் மோகன்குமார், திட்ட பயிற்சியாளர் லட்சுமணன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...