×

குமாரக்குடியில் தண்ணீர் தட்டுப்பாட்டு குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

கொள்ளிடம், ஜூலை 23: கொள்ளிடம் அருகே குமாரக்குடி கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுக்குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து குடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதியாகும். இப்பகுதியில் வருடந்தோறும் மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அனைத்து வாய்க்கால்கள், குளங்கல் மற்றும் குட்டைகளில் தேங்கி நிற்பதாலும், மழைக்காலங்களிலும் தண்ணீர் வருவதாலும், நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறையாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த வருடங்களில் தொடர்ந்து தண்ணீர் இன்றியும், மழை பொய்த்துப் போனதாலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.இதனையடுத்து தண்ணீர் இல்லாத கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரும் கிடைக்காத பல கிராம மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனர்.இதில் கொள்ளிடம் அருகே உள்ள கீழமாத்தூர் ஊராட்சி, குமாரக்குடி கிராமமும் ஒன்றாகும். இக்கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடிநீர் தேவைகளுக்கு அரசால் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை நம்பியே உள்ளனர். தற்போது நிலவிவரும் மும்முனை மின்சார தட்டுப்பாட்டால் ஒருமணி நேரம் மட்டுமே நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 4 கி.மீ தூரத்தில் பக்கத்த்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். அந்த கிராமங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை தவிர்க்க குமாரக்குடி கிராம மக்கள் சிலமணி நேரங்கள் மட்டுமே வழங்கக் கூடிய தண்ணீரை போட்டி போட்டு பெறுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டால் அந்த தண்ணீரும் சரிவர கிடைக்காத நிலையில் மக்கள் குடிநீர் மற்றும் அத்தியவாசிய தேவைகளுக்கு கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த குளத்தில் மட்டும் வருடந்தோறும் தண்ணீர் வற்றாமல் உள்ளதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் இக்குளத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து குடிப்பதற்கு இவ்வூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர்த் தட்டுப்பாட்டால் குளத்து நீரை குடிக்கும் அவல நிலைக்கு இவ்வூர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே மாற்று ஏற்பாடாக தமிழக அரசு ஜெனரேட்டர்கள் மூலம் மோட்டார்களை இயக்கி நிலத்தடி நீரை எடுத்து தங்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் எனவும் நிரந்தர தீர்வாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குமாரக்குடி கிராமத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்