×

கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

கரூர், ஜூலை 23: கரூர் திண்ணப்பா கார்னர் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வாங்கல், ஐந்துரோடு, பசுபதிபாளையம், நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், வெங்கமேடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தெற்கு பிரதட்சணம், வடக்கு பிரதட்சணம் சாலைகளின் வழியாக சர்ச் கார்னர் சென்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இதே போல் இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் வாகனங்களும் இதே சாலையின் வழியாக வந்து செல்கிறது.இதில் தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலைகள் இணையும் பகுதி திண்ணப்பா கார்னர் பகுதியாகும். இந்த பகுதியில் இருந்து டெக்ஸ்டைல்ஸ் தொழில்கள் அதிகளவு உள்ள காமராஜபுரம், செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான சாலைகளும் பிரிகிறது. மூன்று ரோடுகள் பிரியும் இந்த பகுதி நகரின் மிக முக்கிய சந்திப்பு பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்த இடத்தில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தெற்கு பிரதட்சணம் சாலையின் மையத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து திண்ணப்பா கார்னர் வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனாலும் இந்த பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மிகவும் குளறுபடியான இடத்தில் திண்ணப்பா கார்னர் பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.முக்கியமான போக்குவரத்து நடைபெறும் சமயங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மற்ற சமயங்களில் அடிக்கடி போக்குவரத்து பிரச்னைகள் இந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா