கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது

துரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜீவா (28). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்த பியூட்டி பார்லரில் பெண் வரவேற்பாளர் உட்பட 5 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் பியூட்டி பார்லருக்கு வந்து ‘எந்தெந்த வேலைக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் 5 பேருடன் அந்த வாலிபர் திரும்பி வந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர், கல்லாவில் இருந்த ₹47 ஆயிரம் பணம் மற்றும் வரவேற்பாளர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது உரிமையாளர் ஜீவா தற்செயலாக கடைக்கு வந்தபோது உள்ளே நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் கதவை இழுத்து மூடினார். உடனே சுதாரித்துக்கொண்ட 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர், ஜீவா இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் இருந்த 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பியோடிய மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் காஞ்சிபுரம் சிபிஆர் தெருவை சேர்ந்த தருமா (26), திருவான்மியூர் மங்கள் ஏரி பகுதியை சேர்ந்த குமரன் (29), நீலாங்கரை குப்பம் நடுத்தெருவை சேர்ந்த சூர்யா (23), நீலாங்கரை குப்பம் சிங்காரவேலன் 10வது தெருவை சேர்ந்த பிரபாகரன் (23), பள்ளிக்கரணை காமாட்சி அம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ் (21), வெட்டுவாங்கேணி கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (21) ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்ய திட்டமிட்டதும் தெரிந்தது. இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, பணம், நகை, 3 பைக், 5 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

× RELATED பெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய...