×

திருநீர்மலை சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் தினமும் விபத்து

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து திருமுடிவாக்கம் சிப்காட் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு, பல்லாவரம்- திருநீர்மலை  சாலையே பிரதான சாலையாக உள்ளது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இந்த பிரதான சாலை ஏற்கனவே குறுகி உள்ள நிலையில் தற்போது இப்பகுதி பொதுமக்கள் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக இந்த பிரதான சாலையில் திருநீர்மலை அருகே ஒருசில சமூக விரோதிகள் அதிக அளவில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இந்த சாலை மேலும் குறுகி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
 
இவ்வாறு கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய திருநீர்மலை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி திருநீர்மலை பிரதான சாலையில் குப்பைகளை  கொட்டாமல் இருக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், ஏற்கனவே  மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை விரைவில் அகற்றி, பொதுமக்கள்  மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டும் நோக்கத்தில் ஒரு சில சமூக விரோதிகள், இதுபோன்று கட்டிட கழிவுகளை குவித்து வருகின்றனர். போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் இந்த குப்பை கழிவுகளால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இனிமேல் இந்த பிரதான சாலையில் யாரும் குப்பைகளை கொட்டாதவாறு திருநீர்மலை பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். அதையும் மீறி குப்பைகளை கொட்டும் தனி நபர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...