செங்குன்றத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் பைக்குகள் நிறுத்தம்

புழல்: செங்குன்றம் ஜிஎன்டி சாலை காமராஜர் சிலையில் இருந்து மார்க்கெட், நெல் மண்டி பஸ் நிலையம், திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலை வரை சாலையின் இருபக்கமும் அரசு மற்றும் தனியார் வங்கிகள், கடைகள், திரையரங்குகள் நடைபாதை கடைகள் ஹோட்டல்கள் உள்ளன. இந்த கடைகள் மற்றும் வங்கிகளில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வாகனங்களை ஜிஎன்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாக நிறுத்துகின்றனர். எனவே நாள்தோறும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதேபோல் புழல் பிள்ளையார் கோயில்  தெருவில் தனியார் மருத்துவமனை மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கும் வாகனங்கள்  நிறுத்த இடம் இல்லாததால் தெருவிலேயே இருசக்கர வாகனங்கள் குறுக்கும்  நெடுக்குமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும்  அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் பலமுறை போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இனியும் அலட்சியம் செய்யாமல் விதிமுறைகளை மீறி பைக்குகளை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பைக்குகளை பறிமுதல் செய்யவும் வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ‘‘செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் காமராஜர் சிலையில் இருந்து மார்க்கெட், நெல் மண்டி பஸ் நிலையம், திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலை வரையிலும் பைக்குகளை சாலையிலேயே நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் எளிதில் இந்த சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்து வருவதால், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடிவதில்லை. இனியாவது சாலையில் பைக்குகளை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் செய்தாலோ அல்லது ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினாலோ உடனடியாக பாய்ந்து சென்று மடக்கி வசூலில் ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார் இதுபோன்று சாலையில் பைக்குகளை நிறுத்துபவர்களை கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை தருகிறது’’ என்றனர்.

Tags :
× RELATED தாம்பரம்-குண்டுமேடு இடையே மினி பஸ் இயக்க கோரி மக்கள் சாலை மறியல்