துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபருக்கு போலீஸ் வலை

பல்லாவரம்: போரூர், அய்யப்பன்தாங்கல், சாய்ராம் நகரில் உள்ள சொகுசு பங்களா குடியிருப்பில் வசித்து வருபவர் சூர்யகாந்த் (38). இவரது மனைவி சுனிதா (35). இருவரும் சென்னை, சாப்ட்வேர் நிறுவன இன்ஜினியர்கள்.
Advertising
Advertising

நேற்று முன்தினம் இரவு சுனிதாவின் தம்பி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த தீபக் என்பவர் சகோதரியை சந்திக்க சென்னை வந்தார். நள்ளிரவு என்பதால் அவரை குடியிருப்பு வளாக காவலாளிகள் அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவலாளிகளுக்கும், தீபக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபக் தனது காருக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கி 2 முறை சுட்டுள்ளார். இதை பார்த்த காவலாளிகள் உயிருக்கு பயந்து, நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தீபக் காரில் திருவனந்தபுரம் சென்றுவிட்டார்.

தகவலறிந்து போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில், போலீசார்  வந்து விசாரித்தனர். விசாரணையில் சுனிதாவை பார்க்க அவரது தம்பி தீபக் கேரளாவில் இருந்து காரில் வந்துள்ளார். அவரை வர வேண்டாம் என்று, சுனிதா கேட்டுக்கொண்ட போதும் தீபக் வந்துள்ளார். இதனால் குடியிருப்பில் இருந்த காவலாளிகளிடம் தீபக்கை உள்ளே விட வேண்டாம் என சுனிதா கூறியுள்ளார். இதனால்தான் தீபக்கை அவர்கள் தடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தீபக் காவலாளிகளை மிரட்ட காரில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டிருப்பது தெரிந்தது. மேலும் சமீபகாலமாக தீபக் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சுனிதா கூறியதாக போலீசார் தெரிவித்தனர். எனவே தீபக் துப்பாக்கியுடன் ஏன் சென்னை வந்தார்? அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: