லேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

புழல்: மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிலையில் செங்குன்றம் அடுத்த அலமாதி அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 2 ஆண்டாக பிளஸ் 1, பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அலமாதி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பள்ளி அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் செய்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘விரைவில் லேப்டாப் வழங்க ஏற்பாடுகள் செய்வோம்’’ என வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அலமாதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: