தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து உப்பள தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

செய்யூர்: சூனாம்பேடு அருகே தனியார் உப்பள தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து உப்பள தொழிலாளர்கள் நிர்வாகம் அலுவலகம் முன் நேற்று உணவு சமைத்து சாப்பிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சூனாம்பேடு அருகே வில்லிபாக்கம் பகுதியில் தனியார் உப்பள தொழிற்சாலை உள்ளது. இங்கு, பெண்கள் உட்பட 900க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். இவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த கோரிக்கைக்கு தொழிற்சாலை நிர்வாகம் பாராமுகம் காட்டி வருவதாகவும், வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் தலைமையில், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும்,

தொழிலாளர்களுக்கும் கிடையே கடந்த ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு வழங்கும் ஒருநாள் கூலி ₹330ஐ உயர்த்தி 380ஆக வழங்க வேண்டும். பெண்கள் வேலை பார்க்கும் நேரத்தை 8 மணி நேரமாக நீட்டித்து அவர்களுக்கும் ஆண் பணியாளர்களுக்கு நிகரான கூலி வழங்க வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், கலெக்டரின் உத்தரவை உப்பள தொழிற்சாலை நிற்வாகம் ஏற்கவில்லை. மாறாக அதிக கூலி தர வேண்டுமானால், 8 மணி நேரத்துக்கு மேலாக வேலை பார்க்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக, கூலியை தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உப்பள தொழிலாளர்கள் பெண்கள் உள்ட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று, உப்பள நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகம் முன் உணவு சமைத்து சாப்பிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என உப்பள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். படவிளக்கம் பெண்கள் உள்ட்பட  200க்கும் மேற்பட்டோர், தனியார் உப்பள நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு,  உணவு சமைத்து சாப்பிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Tags :
× RELATED அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்